கடவுளும் மனிதனும்
கவலை தீர, பயம் போக, கிடைத்த சுகம் நிலைக்க, என பல காரணங்களுக்கு தம்மை பாதுகாத்து கொள்ள மிக சக்தி வாய்ந்த ஏதோ ஒன்று தேவை. அந்த ஒன்று - கடவுள் - என்று மனிதர்களுக்கு கற்பிக்கப்பட்டதால்,அதை கெட்டியாக பற்றி கொண்டார்கள், உலக மக்கள்.
பூமிக்கு மேலே,அண்டத்தில் எங்கோ ஒரு இடத்தில கடவுள் இருப்பதாக உலகில் உள்ள மக்கள் நம்பும்படி சொல்லப்பட்டு உள்ளதால், மதங்களை பின்பற்றுவோர் அனைவரும் நம்பினார்கள். அங்கு சொர்க்கம், நரகம் உண்டு இன்றும் மதங்கள் சொல்லி நம்பவைத்து. உலக மக்களும் நம்பினார்கள்.
அது மட்டுமா ? கடவுளை வணங்கி வேண்டினால், வேண்டியதெல்லாம் கிடைக்கும் என்று மத குருக்கள் வழி காட்டினார்கள். நோய் தீரும், செல்வம் சேரும், வணிகம் வளம் பெரும், வாழ்க்கை சிறக்கும், என்று மத தலைவர்கள் போதித்ததை உலக மக்கள் முழுமையாக ஏற்றனர்.
பயம் - இதுவே உலக மக்கள்களிடம் உள்ள குறைப்பாடு. இந்த குறைப்பாடு, அந்த காலத்தில் மத தலைவர்களின் முதலீடு. வாழ்க்கை எனும் பெரும் போராட்டத்தில், இன்னல்களில் இருந்து விடுபட உலக மாந்தர்களுக்கு ஒரு பிடிமானம், பாதுகாப்பு தேவைப்பட்டது. அது எங்கோ ஆகாயத்திற்க்கு மேலே உள்ள சக்தி வாய்ந்த கடவுளை வழிபட்டால், தொழுதால், வேண்டி அழுதால், கருணை கொண்டு காக்கப்படுவோம் என்று உலகில் உள்ள மக்கள் நம்பினார்கள். மதங்களும் அப்படித்தான் போதித்தன.
மதங்கள் செழித்தன. மக்களும் இன்றுவரை மதங்கள் கொடுத்த கொடையான கடவுள்களை, விடுவதாக இல்லை. இங்கு ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. மத தலைவர்கள் விட்டாலும், மக்கள் கடவுளையும், மத சடங்குகளையும் விட தயாராக இல்லை. மத தலைவர்களோ அல்லது மதம் காட்டிய வழியில் வழுவாமல் வாழும் உலக மக்களோ, இவர்கள் யாருமே கடவுளை கண்டதில்லை. காணாத கடவுளுக்கே இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்றால், ஒருவேளை கடவுளை கண்டுவிட்டால் ? சொல்லவே வேண்டாம், அந்த கடவுளை, ஒரு வழி பண்ணி இருப்பார்கள்.
காணாத கடவுளுக்கு உருவம் கொடுத்தது உலகில் உள்ள மதங்கள். கடவுளுக்கு, ஆயுதம் கொடுத்தது மதம். அவர்களுக்கு குடும்பம், பிள்ளை குட்டிகள் கொடுத்தது மதங்கள். கடவுளை வகை பிரித்தது மதங்கள். கல்விக்கு ஒரு கடவுள், செல்வம் பெருக ஒரு கடவுள். நோய்கள் தீர ஒரு கடவுள், வீரம் கிடைக்க ஒரு கடவுள், இப்படி ஒவ்வொரு மனித தேவைகளை நிறைவேற்ற வித விதமான கடவுள்களை படைத்தது மதங்கள். இது மனிதர்களுக்கு மிக எளிதாக இருந்தது. எந்தெந்த பிரச்சனைக்கு எந்த கடவுளிடம் அழுது வேண்டி கேட்க வேண்டும் என்று மனதில் எளிதாக பதிந்து போனது.
ஆக, உலக மக்கள் தம்மை காப்பாற்றிக்கொள்ள மதங்கள் கொடுத்த கடவுள்களை அன்று முதல் இன்று வரை மிக நம்பிக்கையுடன் தொழுதும், அழுதும், வேண்டி கொண்டு வாழ்க்கையை நடத்துகின்றனர். யாவருக்கும் குறிக்கோள் ஒன்றே, அது தம்மை துன்பத்தில் இருந்து காப்பாற்றி கொள்ளுவதே. அதற்கு, மதங்கள் கொடுத்த கடவுள்கள் உலக மக்கள் அனைவருக்கும் உதவுகிறது.