உலக மத கடவுள்
கடவுளை கண்டவர் இங்கு யாரும் இல்லை. கண்டதாக சொன்னவர் பல ஆயிரம் பேர்கள் உலகில் உண்டு. அவை ஆதாரமற்றவையாகவே இன்றளவும் உள்ளது.
கடவுள் எங்கு இருக்கிறார் ? என்ற கேள்விக்கு, உலகில் ஒவ்வொரு மதமும் வெவ்வேறு விதத்தில் விளக்கம் அளிக்கின்றன. இதில் பொதுவான பொருள் என்ன என்றால், கடவுள் மேலே இருக்கிறார், மகா சக்தி உடையவர், அவரே எல்லா உயிர்களையும் படைக்கிறார், தீயவர்களை அழிக்கிறார், நல்லவர்களுக்கு துணை நிற்கிறார், எப்போதும் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார், என்று எல்லா மதங்களும் சொல்லுகின்றன.
உலகில் உள்ள மதங்கள் கூறிய, கடவுள் பற்றிய கருத்துக்களை, மதம் சார்ந்த அந்தந்த நாட்டின் மக்கள் நம்பினார்கள், சரியாக சொல்லுவது என்றால் இன்று வரையில் நம்புகிறார்கள். உலகில் உள்ள மத தலைவர்கள் யாராவது கடவுளை பார்த்தது உண்டா ? என்று கேள்வி கேட்டால், அதற்கு, இன்று அளவும் யாரும் கடவுளை பார்த்தது இல்லை இன்றே பதிலே கிடைக்கும்.
உலக மத தலைவர்கள் யாரும் இன்றுவரை கடவுளை பார்த்ததில்லை என்றால், எதை வைத்து இவர்கள் கடவுளை பற்றிய கருத்துக்களை மக்கள் முன் வைக்கிறார்கள். தாங்கள் காணாத கடவுளை பற்றி இவர்களுக்கு என்ன தெரிந்துகொள்ள முடியும். இவர்கள் சொல்லும் அந்த கடவுள் யார் ? எங்கு வாழ்கிறார் ? இந்த கேள்வி போல் அடுக்கு அடுக்காக ஆயிரம் கேள்விகள் நம் சந்தேகம் தெளிய கேட்டாலும், தெளிவு பெரும் அளவுக்கு மத தலைவர்களிடம் இருந்து பதில் வராது. இன்று நேற்று அல்ல, கால காலமாய் இதுதான் நடக்கிறது.
மதங்கள் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டது. மனிதன் தன்னை புனிதன் என்று தன்னை தானே மக்கள் முன் நிறுத்தி, மதத்தை தோற்றுவித்து வளர்த்தான். ஒரு வகையில் மக்களுக்கு மதம் அன்றே தேவைப்பட்டது. பெரும் சக்தியாக கடவுள் இருக்கிறார் என்று சொல்லும் மதத்தை மக்கள் நம்பினார்கள். அந்த கடவுள் உனக்கும் அருளுவார், கண்ணீர் துடைப்பார், துன்பம் நீக்குவார், எதிரியை வீழ்த்துவார், செல்வத்தை அல்லி கொடுப்பார், என்று மதங்கள் சொல்லிய அனைத்தையும் மக்கள் நம்பினார்கள் , இன்றும் நம்புகிறார்கள்.
இன்றுவரை, உலக மதங்கள் கூறிய கடவுள்கள் யாருக்கும் காட்சி தரவில்லை. நான் கடவுளை கண்டேன் என்று கூறும் மனிதர்களின் கூற்றில் உண்மை இருந்ததாக இன்றுவரை ஆதாரம் எதுவும் இல்லை. மதங்கள் அன்று முதல் கூறுகின்றன , மனிதர்கள் இன்று வரை நம்புகின்றனர்.
உலக மக்கள் கோடான கோடி பேர் இன்று வரை மதங்கள் சொல்லிய கடவுள்களை நம்பி தொழுகின்றனர். தங்களுக்கு பயனற்ற ஒன்றை என்றுமே யாரும் ஏற்க மாட்டார்கள். சுருங்க சொன்னால், கடவுள் மக்களுக்கு பயன்படுகிறார். கடவுளால் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் வாழுவதற்கு உதவியாகிறது.
மனித வாழ்க்கையே ஒரு போராட்டம். காலையில் கண் விழித்த நேரம் முதல் கண் உறங்கும் நேரம் வரை மனிதர்கள் அவரவர் சக்திக்கு உட்பட்டு , எதிர் நீச்சல் போட்டு , ஒவ்வொரு நாளையும் கடக்கின்றனர். உடலை காக்க போராட்டம் , உடமையை காக்க போராட்டம், உள்ளதை காக்க போராட்டம், மானத்தை காக்க போராட்டம், பணத்தை ஈட்ட போராட்டம், பணத்தை காக்க போராட்டம், அப்பப்ப அடுக்கி கொண்டே போனால் பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தூரத்தையும் தாண்டும் இவர்கள் போராட்டங்களின் எண்ணிக்கை.
இத்தனை போராட்டங்கள் மனிதர்களை சோர்வடைய செய்கிறது. தூக்கம் பிடிக்கவில்லை. போராட்டங்கள் ஓயவில்லை. மன உளைச்சல் நீக்கவில்லை. என்னதான் இவர்கள் செய்வார்கள் ? அங்கேதான் வருகிறது அருமருந்து. அதுவே மதம் காட்டிய கடவுள். ஆமாம் , மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் , துன்பங்கள், சோகங்கள். சொல்லி அழ ஒரு இடம் வேண்டும், ஒரு மனிதர் போன்ற உருவம் கொண்ட மகா சக்தி வேண்டும். அது கிடைத்தது. மதங்கள் வாரி வாரி கொடுத்தது. மனிதர்களுக்கு போதும் போதும் என்கிற அளவுக்கு வித விதமான, ஆண் கடவுள், பெண் கடவுள் என்று அள்ளி அள்ளி உலக மதங்கள் கொடுத்தது.
மனிதர்கள் இளைப்பாற மதமும், அது கொடுத்த கடவுள்களும், மிகவும் பயன்பட்டது , இன்றும் பயனாகிறது. யாரும் கண்டிராத கடவுள், இன்றுவரை கோடான கோடி மனிதர்களுக்கு உந்து சக்தியாக பயன்படுகிறது என்பதில் ஐயமில்லை. கடவுள் இருக்கின்றார் என்று கூறும் மத தலைவர்களும் அவர்களை சார்ந்த பெரும் கூட்டமும் பெரும் பயன் அடைகிறது என்பதும் உண்மையே.